ADDED : டிச 04, 2024 11:51 PM
மும்பை: ஹைதராபாதில் இருந்து மும்பைக்கு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 24 கோடி ரூபாய் மதிப்பிலான, 'மெபெட்ரோன்' போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்தனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் இருந்து பஸ்சில் மும்பைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக, வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மும்பை மண்டல புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பஸ்சில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அதில் பயணம் செய்த இருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவற்றில், பவுடர் வடிவில் இருந்த 16 கிலோ பொருளை ஆய்வு செய்ததில், அது மெபெட்ரோன் போதைப் பொருள் என தெரிய வந்தது.
இதன் மதிப்பு 24 கோடி ரூபாய். ஹைதராபாதில் இருந்து மும்பைக்கு அதை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போதைப்பொருளை கடத்திய இருவரை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த கடத்தலில், போதைப்பொருளை பெறுபவர் மற்றும் புரோக்கர் என மேலும் மூவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 1.93 கோடி ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.