UPDATED : மே 03, 2025 03:46 AM
ADDED : மே 03, 2025 03:45 AM

புதுடில்லி: நான்கு மாநிலங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய தொடர் சோதனைகளில், 547 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் என்.சி.பி., எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயங்குகிறது. போதை பொருள் புழக்கத்தை தடுக்க என்.சி.பி.,யினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பஞ்சாப், ஹிமாச்சல், உத்தரகண்ட், டில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள மருந்து நிறுவனங்களில் அமிர்தசரஸ் என்.சி.பி.,யினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் குறிப்பிட்ட மாத்திரைகள், பவுடர்கள் ஆகியவற்றை, போதை பயன்பாட்டுக்காக பெருமளவில் தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய என்.சி.பி.,யினர், வெளிநாடு தப்ப முயன்ற மருந்து நிறுவன உரிமையாளரையும் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு, 547 கோடி ரூபாய். நான்கு மாதங்களுக்கு முன் பஞ்சாபின் அமிர்தசரசில் 5,000க்கும் மேற்பட்ட போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் பெற்ற தகவல்களை வைத்து, இந்த போதை பொருள் கும்பலை என்.சி.பி.,யினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.