வாகன நிறுத்த வசதிகள் இல்லாததால் வணிக வளாகத்தை 15 நாள் மூட உத்தரவு
வாகன நிறுத்த வசதிகள் இல்லாததால் வணிக வளாகத்தை 15 நாள் மூட உத்தரவு
ADDED : ஜன 01, 2024 06:34 AM

பெங்களூரு: வாகன நிறுத்த வசதி இல்லாததால், வணிக வளாகத்தை 15 நாட்கள் மூட, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டார்.
பெங்களூரு பேட்ராயனபுராவில் 'மால் ஆப் ஏசியா' என்ற பெயரில், பிரமாண்ட வணிக வளாகம் கடந்த நவம்பரில் திறக்கப்பட்டது. இந்த வணிக வளாகம், விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்து உள்ளது.
இப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வணிக வளாகத்திற்கு வருவோருக்கு, போதிய வாகன நிறுத்த வசதியும் செய்து கொடுக்கவில்லை.
வணிக வளாக பார்க்கிங்கில் 2,324 கார்கள் மட்டுமே நிறுத்தும் வசதி உள்ளது. ஆனால், வேலை நாட்களில் தினமும் 5,000 கார்களும், வார இறுதி நாட்களில் 5,000 முதல் 8,000 கார்களும் வருகின்றன.
இடவசதி இல்லாததால் கார்களை சாலையோரம் நிறுத்திவிட்டு, வணிக வளாகத்திற்குள் சென்று விடுகின்றனர். வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில், ஏராளமான மருத்துவமனை உள்ளதால், அங்கு செல்வோர் அவதி அடைகின்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து இணை கமிஷனர் அனுசேத், வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமிபிரசாத் ஆகியோர், போலீஸ் கமிஷனர் தயானந்தாவிற்கு அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து, வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்காக, வணிக வளாகத்தை 15 நாட்கள் மூடும்படி உத்தரவிட்டார்.
இதன்படி வணிக வளாகம் மூடப்பட்டு உள்ளது.
ஆங்கிலத்தில் பெயர் பலகை வைப்பதை கண்டித்து, கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர் ஊர்வலம் சென்ற போது, இந்த வணிக வளாகத்தின் பலகைகளை சூறையாடியது குறிப்பிடத்தக்கது.