அணைகளில் நீர் இருப்பு குறைவதால் அதிகாரிகள்... கவலை! கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
அணைகளில் நீர் இருப்பு குறைவதால் அதிகாரிகள்... கவலை! கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
ADDED : பிப் 29, 2024 06:07 AM

மைசூரு: பெங்களூரு, மைசூரு உட்பட, பல நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் தண்ணீர் வேகமாக வற்றி வருவதால், காவிரி நீர்ப்பாசன அதிகாரிகள் கவலையில் உள்ளனர். இதனால், கோடை காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கோடை காலத்துக்கு முன்பே, கர்நாடகாவில் வெயில் சுட்டெரிக்கிறது. பெங்களூரு, மைசூரு, பல்லாரி, கலபுரகி உட்பட பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது.
இதன் விளைவாக தண்ணீர் ஆவியாவதால், அணைகள் வேகமாக காலியாகின்றன. குறிப்பாக பெங்களூரு, மைசூரு, ராம்நகர் என, பல நகரங்களின் மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைகிறது.
கோடையின் துவக்கத்திலேயே, அணைகள் காலியாவதால் வரும் நாட்களில், நகரங்களுக்கு குடிநீர் வினியோகிப்பது, பெரும் சவாலாக இருக்கும் என, காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
ஏற்கனவே பெங்களூரின், மகாதேவபுரா, ஆர்.ஆர்.நகர், கே.ஆர்.புரம் உட்பட புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்னை வாட்டுகிறது. பல இடங்களில் பெண்கள், குடங்களுடன் அலைவதை காண முடிகிறது.
இதே சூழ்நிலை மைசூரிலும் உள்ளது. நகரின் பல லே அவுட்களில், இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மைசூரு நகருக்கு 230 எம்.எல்.டி., தண்ணீர் தேவைப்படுகிறது. 60 எம்.எல்.டி., தண்ணீர், புறநகர் பகுதிகள், ரமணஹள்ளி உட்பட 48 கிராமங்கள், தொழிற்சாலைகள், மைசூரு நகர வளர்ச்சி ஆணைய லே அவுட்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
தற்போது கே.ஆர்.எஸ்., அணையில், 'டெட் ஸ்டோரேஜ்' சேர்த்து, 16.08 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. இதில் 12 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
கபினி அணையில், 'டெட் ஸ்டோரேஜ்' சேர்த்து, 11.74 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. இதில், 8 டி.எம்.சி., மட்டுமே பயன்படுத்த முடியும்.
மைசூரில் 13.50 லட்சம் மக்கள் தொகை உள்ளது. ஒரு மாதத்துக்கு குடிநீருக்காக, 3.5 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது. நகருக்கு 305 எம்.எல்.டி., தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இதில், 65 சதவீதம் தண்ணீருக்கு மட்டும் கட்டணம் வசூலாகிறது. 35 சதவீதம் தண்ணீர் எப்படி, எங்கு வீணாகிறது, எங்கு போகிறது என்பதை கண்டுபிடிப்பதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆர்வம் காண்பிக்கவில்லை.
குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளுக்கு, மைசூரு, மாநகராட்சி டேங்கர் மூலம் குடிநீர் சப்ளை செய்கின்றன. தனியாரிடம் 30 போர்வெல்களை வாடகைக்கு பெற்று, டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று தேவையான பகுதிகளுக்கு சப்ளை செய்கிறது.
ஆனால் பல பகுதிகளில், டேங்கர் நீரும் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
'விளக்கின் கீழே இருள்' என்பதை போன்று, காவிரி, கபிலா ஆறுகள் கூப்பிடு தொலைவில் இருந்தும், மைசூருக்கு குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையை தவிர்க்க முடியவில்லை. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைகிறது.
பல இடங்களில் புதிதாக போர்வெல் தோண்டுவதை, காண முடிகிறது. ஏற்கனவே உள்ள போர்வெல்களில் புளோரைடு கலந்த தண்ணீர் வருவதால், மக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
கோடை காலம் கால் பதிப்பதற்கு முன்பே, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அணைகள் காலியாகின்றன. வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரித்தால், சொற்ப தண்ணீரும் வறண்டு போகும்.
மக்களுக்கு எப்படி குடிநீர் வினியோகிப்பது, மழைக்காலம் துவங்கி மழை பெய்யும் வரை, சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என, அதிகாரிகள் கையை பிசைகின்றனர்.
அணைகளில் இருப்புள்ள தண்ணீரை, சிக்கனமாக பயன்படுத்துவது மட்டுமே, தற்போதுள்ள ஒரே வழியாகும். இதை மனதில் கொண்டு, அதிகாரிகள் திட்டம் வகுக்கின்றனர்.
இது குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 'அணைகளில் தண்ணீர் காலியாகிறது. எனவே குடிநீரை வீணாக்காதீர்கள். சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள்' என, மன்றாடுகின்றனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2023ல், கர்நாடகாவில் மழை பற்றாக்குறையால், அணைகள் நிரம்பவில்லை. குறிப்பாக காவிரி நீர்ப்பாசன அணைகள் நிரம்பவில்லை. எனவே, மழைக்காலம் வரும் வரை, மக்களுக்கு குடிநீர் வினியோகிப்பது, எங்களுக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.
பொது மக்களும், சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். குடிநீரை வாகனம் கழுவ, தோட்டத்துக்கு பாய்ச்ச பயன்படுத்த கூடாது. குடிநீர் நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மார்ச் முதல் வாரம், கர்நாடகாவில் மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மழை பெய்து அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தால், சூழ்நிலையை சமாளிக்கலாம். இல்லை என்றால் கடினமான நாட்களை எதிர்கொள்ள, தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

