ADDED : மார் 07, 2024 03:52 AM
பெலகாவி : முதல்வர் உரையாற்றும்போது, சுழற்காற்று வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெலகாவி, அதானியின் கொட்டலகி கிராமத்தில், அம்மாஜேஸ்வரி நீர்ப்பாசன திட்டத்தைத் துவக்கி வைக்க, முதல்வர் சித்தராமையா நேற்று வந்திருந்தார். 38,000த்துக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி செய்யும் திட்டம் இதுவாகும். 1,486 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
திட்டம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், அதானி எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார், அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பால்கர், திம்மாபுரா உட்பட, பலர் பங்கேற்றனர். கிராமத்தினர் குவிந்திருந்தனர்.
நிகழ்ச்சி மேடையில், முதல்வர் உரையாற்றும்போது, திடீரென பெரும் சுழற் காற்று வீசியது. மக்கள் பீதியுடன் எழுந்து செல்லத் துவங்கினர். இதை பார்த்த முதல்வரும், துணை முதல்வரும் மக்களை தைரியப்படுத்தி, அமரும்படி கேட்டுக்கொண்டனர். சுழற் காற்றால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

