ADDED : ஜூலை 24, 2025 10:07 PM
குருகிராம்:ஜே.ஜே.பி., கட்சியை சேர்ந்த பிரபல பாடகர் ராகுல் பாசில்புரியா மீதான துப்பாக்கிச்சூடு குறித்து, குருகிராம் போலீஸ் கமிஷனர் விகாஸ்குமார் அரோராவை, முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவுடன் அக்கட்சி பிரமுகர்கள் பலர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.
ஜனநாயக் ஜனதா கட்சி என்ற கட்சியை, முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா நடத்தி வருகிறார். அவரின் கட்சியை சேர்ந்த ராகுல் பாசில்புரியா என்ற பிரபல பாடகர் மீது மர்ம நபர்கள் சமீபத்தில் துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் காயமின்றி தப்பினார்.
எனினும், அவர் மீதான தாக்குதல் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்; அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான குழு நேற்று முன்தினம், குருகிராம் நகர போலீஸ் கமிஷனர் விகாஸ் குமார் அரோராவை சந்தித்து பேசினார்.
பின், செய்தியாளர்களிடம் சவுதாலா கூறியதாவது:
மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. முதல்வர் நயப் சிங் சைனி தலைமையிலான அரசு, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதில் இருந்து, மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. போலீசார் மீது அவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால், மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
ராஜ்யசபா தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், பதவியை ராஜினாமா செய்தது, மத்திய அரசு நிர்வாகத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்த ஒருவர் திடீரென பதவி விலகியுள்ளது, பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல, முன்னர் நடந்ததில்லை.
இவ்வாறு துஷ்யந்த் சவுதாலா கூறினார்.