தசரா யானைகள் இன்று பயணம் வனத்துறை அதிகாரி புகழாரம்
தசரா யானைகள் இன்று பயணம் வனத்துறை அதிகாரி புகழாரம்
ADDED : அக் 13, 2024 11:16 PM
மைசூரு: ''தசரா ஜம்பு சவாரியில், கேப்டன் அபிமன்யு உட்பட அனைத்து யானைகளும் தங்கள் பொறுப்பை சரியாக செய்தன. யானைகள் இன்று அரண்மனையில் இருந்து, முகாம்களுக்கு அனுப்பப்படும்,'' என மாவட்ட அதிகாரி பிரபு கவுடா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜம்பு சவாரியில், கேப்டன் அபிமன்யு, லட்சுமி, ஹிரன்யா உட்பட அனைத்து யானைகளும் தங்களின் பொறுப்பை, மிக சிறப்பாக செய்தன. இம்முறை புதிய யானைகள் தசராவில் பங்கேற்றன. இவற்றை தயாராக்குவது, சவாலாக இருந்தது. ஆனால் பாகன்கள், உதவியாளர்கள் கஷ்டப்பட்டு, அவற்றை பழக்கினர்.
வனத்துறை ஊழியர்கள் கஷ்டப்பட்டு பணியாற்றியதால், மைசூரு தசரா வெற்றிகரமாக நடந்தது. முதன் முறையாக, ஜம்பு சவாரியில் பங்கேற்கும் யானைகளின் பொறுப்பு, என்னிடம் அளிக்கப்பட்டது. எங்கள் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதால், எனக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.
நாங்கள் ஒற்றுமையுடன் பணியாற்றினோம். பாகன்கள், உதவியாளர்களுக்கு நன்றி. இவர்கள் யானைகளை நன்றாக பராமரித்தனர். அபிமன்யு, வெற்றிகரமாக அம்பாரி சுமந்தது. அடுத்த முறை அம்பாரி சுமக்க எந்த யானையை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, ஆலோசித்து முடிவு செய்வோம்.
அபிமன்யுவுக்கு மாற்றாக தனஞ்செயா, பிரசாந்த் யானைகளை வைத்துள்ளோம். யானைகள் நாளை (இன்று) அரண்மனையில் இருந்து, முகாம்களுக்கு அனுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.