ADDED : அக் 13, 2024 07:43 AM

மும்பை : மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அங்கு நேற்று நடந்த தசரா பொதுக்கூட்டத்தில் அரசியல் அனல் வீசியது.
நவராத்திரி விழாவின் கடைசி நாள், தசரா பண்டிகையாக மஹாராஷ்டிராவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவது வழக்கம். நேற்றும் பொதுக்கூட்டங்கள் நடந்தன. இங்கு சிவசேனா கட்சி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவாகவும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பிரிவாகவும் செயல்படுகின்றன.
தசரா பண்டிகையொட்டி இந்த இரு கட்சிகளும் மும்பையில் நேற்று போட்டி பொதுக் கூட்டங்களை நடத்தின.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசினார். சிவாஜி பூங்காவில் நடந்த கூட்டத்தில் சிவசேனா உத்தவ் பிரிவின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார்.
இருவரும், ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர்.
சிவசேனாவுக்கு விடுதலை!
உண்மையான சிவசேனாவினர் அடிப்படை கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். 'ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்' என, பால் தாக்கரே கூறியுள்ளார். ஆனால் இன்றோ ஹிந்து என சொல்லிக் கொள்ள சிலர் வெட்கப்படுகின்றனர். உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து வெளியே வந்ததன் வாயிலாக, சிவசேனாவுக்கே நாங்கள் விடுதலை அளித்துள்ளோம்.
- ஏக்நாத் ஷிண்டே
ஓட்டுக்காக சிவாஜி!
ஓட்டுக்காக தான் சிவாஜி சிலையை இந்த அரசு மீண்டும் கட்டுகிறது. சிவாஜி அவர்களை பொறுத்தவரை ஓட்டு வங்கி, எங்களுக்கு கடவுள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'அனைத்து மாவட்டத்திலும் சத்ரபதி சிவாஜிக்கு கோவில் கட்டுவோம். ஹிந்துத்வாவை காக்க அனைவரும் ஒன்று சேர்வோம்' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் அழைக்கிறார். கடந்த 10 ஆண்டில் அவரும், மோடியும் என்ன செய்து கொண்டிருந்தனர்.
- உத்தவ் தாக்கரே