ADDED : மே 30, 2026 11:27 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோடை வெயில் கொளுத்திய நிலையில், நேற்று மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் புழுதி புயல் வீசியது.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில், கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தலைநகர் ஜெய்ப்பூர், பிகானீர் உள்ளிட்ட மாவட்டங்களில், நேற்று மதியம் திடீரென புழுதி புயல் வீசியது.
மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனால், வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர். நுாற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதே போல் விவசாய பயிர்களும், தற்காலிக குடியிருப்புப் பகுதிகளும் பலத்த காற்றால் சேதமடைந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புழுதி புயலை தொடர்ந்து சூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. வெப்பம் தணிந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
