ADDED : ஜன 29, 2024 04:53 AM

லக்னோ : விவாகரத்து பெற்ற கணவருக்கு வேலை இல்லாவிட்டாலும், நீதிமன்ற உத்தரவின்படி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டியது, அவரது கடமை என, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த ஜோடி, 2015ல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணவர் மற்றும் மாமனார் - மாமியார் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்த மனைவி, 2016ல் தாய் வீட்டுக்கு சென்றார்.
இவர்களுக்கு லக்னோ குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அந்த உத்தரவில், விவாகரத்து பெற்ற கணவர், தன் மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் 2,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், தன் மனைவி ஆசிரியர் பணி செய்து, மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பதாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரினார்.
மனுவை விசாரித்த நீதிபதி ரேணு அகர்வால் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மனைவி மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தவறிவிட்டார். மேலும், அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது. அவர் கூலி வேலை செய்தாலும் நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
அப்படியிருக்க, மாதம் 2,000 ரூபாய் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டியது மனுதாரரின் கடமை. அதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க முடியாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.