பூமிக்கு புது மாப்பிள்ளை வரப்போகுதே! அந்த மினி நிலாவில் அப்படி என்ன தான் இருக்கு!
பூமிக்கு புது மாப்பிள்ளை வரப்போகுதே! அந்த மினி நிலாவில் அப்படி என்ன தான் இருக்கு!
ADDED : செப் 15, 2024 07:41 AM

புதுடில்லி: இரண்டு மாதங்களுக்கு பூமியைச் சுற்றி புதுமையான மினி நிலா ஒன்று வர உள்ளது. இது பற்றி தெரிந்து கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கிறது என்கின்றனர் விண்வெளி ஆய்வாளர்கள்.
அனைத்து கோள்கள் மீதும் சூரியனுக்கு இருக்கும் ஆதிக்கம் மிகப்பெரியது. அதேபோல் ஒவ்வொரு துணைக்கோள் மற்றும் கோளுக்கும் ஒரு சிறப்பம்சம் இருக்கும். நிலாவால் சூரியனை போல் வெளிச்சத்தை தர முடியாது. அதேநேரத்தில் இரவு நேரத்தில் நிலாவின் தயவும் பூமிக்கு தேவை.
இப்படிப்பட்ட தன்மைகள் கொண்ட பிரபஞ்சத்தில் நிலாவுக்கு விரைவில் ஒரு தற்காலிக இளைய துணை கிடைக்க போகிறது. அதுதான் மினி நிலா. 2024 PT5 என்ற 10 மீட்டர் அளவுள்ள குறுங்கோள், செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை பூமியின் சுற்றுப்பாதையைப் சுற்றும்.
அதேநேரத்தில் சுற்றுப்பாதையை முழுமையாக சுற்றி முடிக்க முடியாது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இது சூரியனைச் சுற்றத் திரும்பும். இது ஒரு அரிய நிகழ்வு. பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் கைப்பற்றப்பட்டு, 2 மாதங்களுக்கு பூமியைச் சுற்றி வரும். இது குறித்து, அமெரிக்க வானியல் சங்கத்தின் ஆய்வுக் குறிப்புகள் படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
10 மீட்டர் விட்டம்
பூமியை சுற்றி வர உள்ள மினி நிலா, 10 மீட்டர் (33 அடி) விட்டம் கொண்டது. இது மிக பெரியதாக இருக்காது. 2024 PT5 பூமியைச் சுற்றி அதன் 53-நாள் பணியின் போது, ஒரு முழு சுற்றுப்பாதையை உருவாக்க முடியாது, அதற்குப் பதிலாக அது பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் செல்லும்.
சிறுகோள்கள்
இந்தமாதிரி உருவாகும் சிறுகோள்கள் சில சமயங்களில் நமது கிரகத்தைச் சுற்றி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முழு சுழற்சிகளை செய்கின்றன. மற்ற சமயங்களில், அவை ஒரு சுற்றுப்பாதையை முடிக்கும் முன் பூமியின் நீள்வட்டப் பாதையிலிருந்து விலகிச் செல்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டில், பூமியின் ஈர்ப்பு விசையால் கைப்பற்றப்பட்ட ஒரு சிறுகோள் ஜூலை 2006 முதல் ஜூலை 2007 வரை ஒரு வருடம் சுற்றி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.