நிலநடுக்க முன்னெச்சரிக்கை முறை அவசியம்! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் யோசனை
நிலநடுக்க முன்னெச்சரிக்கை முறை அவசியம்! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் யோசனை
ADDED : ஜன 15, 2025 09:05 AM

புதுடில்லி: ''வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளே, பல பேரிடர்களில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்த்துள்ளது. நிலநடுக்கம் தொடர்பாகவும் முன்னதாகவே தகவல்களை தெரிவிப்பது தொடர்பான முறையை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ஐ.எம்.டி., எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின், 150வது ஆண்டு விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில், 'மிஷன் மவுசம்' எனப்படும் வானிலை இயக்கத்தை அவர் துவக்கி வைத்தார். வானிலை தொடர்பான தொடர் ஆய்வுகள், கண்காணிப்பு முறைகளை நவீனப்படுத்துவது, உயர் திறன் உள்ள வானிலை ஆய்வு மையங்களை அமைப்பது, அடுத்த தலைமுறை ரேடார்கள், செயற்கைக்கோள்களை உருவாக்குவது உள்ளிட்டவை அடங்கிய இந்த இயக்கம்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150வது ஆண்டையொட்டி, சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
விஞ்ஞான வளர்ச்சியே, ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. அந்த வகையில், வானிலை ஆய்வுகளில் நாம் பல முன்னேற்றங்களை சந்தித்துள்ளோம். வானிலை ஆய்வுகள், ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையுடனும் தொடர்புடையது. திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் அரசுகளுக்கு உதவுகிறது.
வானிலை தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிகளால்தான், பேரிடர் தொடர்பாக முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதனால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், அதிக உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அறிவியல் துறையில் முன்னேற்றம் மற்றும் அதை சிறப்பான முறையில் செயல்படுத்துவது ஆகியவையே, சர்வதேச அரங்கில் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்டும் திருப்புமுனையாக உள்ளது. அந்த வகையில், திடீர் வெள்ளத்தை எதிர்கொள்ளும் நம் நடைமுறை உலகெங்கும் புகழ்பெற்றது. இந்த வசதியை நாம் மட்டும் பயன்படுத்தவில்லை. நம் அண்டை நாடுகளுக்கும் உதவுகிறோம். உலகிலேயே, அண்டை நாடுகளுக்கும் வானிலை ஆய்வு தகவல்களை அளிப்பது இந்தியா மட்டுமே.
நிலநடுக்கம் தொடர்பாகவும் முன்னதாகவே எச்சரிக்கை செய்யும் முறையை உருவாக்க வேண்டும். இதில், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.