476 அரசியல் கட்சிகளை நீக்கும் தேர்தல் ஆணையம்: தமிழகத்தில் மட்டும் 42 கட்சிகள்
476 அரசியல் கட்சிகளை நீக்கும் தேர்தல் ஆணையம்: தமிழகத்தில் மட்டும் 42 கட்சிகள்
ADDED : ஆக 11, 2025 06:02 PM

புதுடில்லி: 476 பதிவு செய்யப்பட்ட அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு இருக்க வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்ற தவறிய பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, 334 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் தற்போது பட்டியலில் உள்ள பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2854 என்பதில் இருந்து 2520 ஆக குறைந்துள்ளது.
தற்போது 2வது கட்டமாக, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மேலும் 476 அரசியல் கட்சிகளை நீக்குவதற்காக அவை அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 30 மாநிலங்களில் நீக்கப்பட உள்ள பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் எத்தனை என்ற பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகள் எண்ணிக்கை 121 ஆகும்.
அதற்கு அடுத்த இடத்தில் மஹாராஷ்டிரா (44) உள்ளது. 3வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இங்கு மொத்தம் 42 பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருக்கின்றன.4வது இடத்தில் டில்லி(41) 5வது இடத்தில் மத்திய பிரதேசம்(23) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
நாட்டிலேயே குறைந்த அளவாக அந்தமான், திரிபுரா மற்றும் சண்டிகரில் தலா ஒரேயொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி நீக்கப்படும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.