ரூ.12,000 கோடி பண மோசடி வழக்கு தொழிலதிபரை கைது செய்தது ஈ.டி--.,
ரூ.12,000 கோடி பண மோசடி வழக்கு தொழிலதிபரை கைது செய்தது ஈ.டி--.,
ADDED : நவ 14, 2025 12:53 AM

புதுடில்லி: பிரபல தொழிலதிபர் மனோஜ் கவுர், 12,000 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில், ஈ-.டி., எனப்படும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவை தலைமையிடமாக வைத்து ஜே.பி., குழுமம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மனோஜ் கவுர் உள்ளார்.
இந்த குழுமத்தின் கீழ், 'ஜே.பி. இன்ப்ராடெக், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்' உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
வழக்குப்பதிவு இவற்றின் நிர்வாக இயக்குநராகவும் மனோஜ் உள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரும் பணிகளை மேற்கொண்டு வந்த ஜே.பி., இன்ப்ராடெக் நிறுவனம், வீடு கட்டித்தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை முதலீடாக சேகரித்தது.
அந்த பணம், சட்டவிரோதமாக பல கிளை நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. இதனால், முதலீட்டாளருக்கு உறுதியளித்தபடி, வீடு கட்டித்தர முடியவில்லை.
இதுகுறித்து ஜே.பி., இன்ப்ராடெக் நிறுவனம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதே சமயம், அந்த நிறுவனமும் 2017ல் திவாலானது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறையினர் பணமோசடி வழக்கு பதிவு செய்தனர்.
வீட்டுவசதி திட்டங்களுக்காக முதலீட்டாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பணம், தவறாக பயன்படுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், 12,000 கோடி ரூபாய் மோசடி நடந்ததும் அம்பலமானது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் தலைவர் மனோஜ் கவுர் மீது, குற்றவியல் சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதலீட்டாளர்கள் செலுத்திய தொகை, சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதும் அம்பலமானது.
இதையடுத்து, மனோஜ் கவுருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.
விசாரணை டில்லி, நொய்டா, காஜியாபாத் உட்பட, 15க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 1.70 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதன்பின் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், மனோஜ் கவுரை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர். பணமோசடி தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

