ஈ.டி. அட்டாக் விவகாரம் முற்றுகிறது: மம்தா கட்சி நிர்வாகியை கைது செய்ய கவர்னர் ஆர்டர்
ஈ.டி. அட்டாக் விவகாரம் முற்றுகிறது: மம்தா கட்சி நிர்வாகியை கைது செய்ய கவர்னர் ஆர்டர்
ADDED : ஜன 08, 2024 02:42 AM

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், விசாரணைக்கு சென்ற ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், முக்கிய நபராக கருதப்படும், ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கை, உடனடியாக கைது செய்யும்படி, போலீசாருக்கு அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
ரேஷன் முறைகேடு
இங்கு நடந்த ரேஷன் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி என்ற இடத்தில் உள்ள, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஷாஜஹான் ஷேக் வீட்டுக்கு, சமீபத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர்.
அப்போது, அவர்கள் வந்த வாகனங்கள் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த மூன்று அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலை, ஷாஜஹான் ஷேக் ஆதரவாளர்கள் நடத்தியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவத்துக்கு பின், ஷாஜஹான் ஷேக் தலைமறைவு ஆகிவிட்டார். அவருக்கு எதிராக, 'லுக் அவுட்' எனப்படும் தேடப்படும் நபர் என்பதற்கான நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதலுடன், கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், முக்கிய நபராக கருதப்படும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆதரவு அளிப்பதாக புகார் வந்துள்ளது.
ஆதாரம்
அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து, உடனடியாக அவரை, மாநில டி.ஜி.பி., கைது செய்ய வேண்டும்.
ஷாஜஹான் ஷேக் எல்லையை தாண்டி சென்றிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த திரிணமுல் காங்., செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ''எந்த அடிப்படையில் கவர்னர் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார் என்பது தெரியவில்லை. உறுதி யான அறிக்கையோ, ஆதாரமோ இல்லாமல் அவர் எப்படி இப்படி குற்றம் சாட்ட முடியும்?'' என்றார்.
மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், ''கவர்னர் கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஷாஜஹான் கைது செய்யப்பட்டால், ஊழல் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களும் சிக்குவர்,'' என்றார்.