சட்டவிரோத மதமாற்றம்: சங்கூர் பாபா மீதான விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை
சட்டவிரோத மதமாற்றம்: சங்கூர் பாபா மீதான விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை
ADDED : ஜூலை 10, 2025 10:32 PM

புதுடில்லி: உ.பி.,யில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவருக்கு எதிராக விசாரணையை துவக்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வங்கிகளிடம் தகவலை கேட்டு உள்ளனர்.
உ.பி.,யின் பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட  மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நஸ்ரின் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
அவருக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்து குவிந்துள்ளது. அந்த பணத்தை அவர் தவறாக பயன்படுத்தி இருக்கலாம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பணமோசடி தடுப்பு சட்டம், எப்சிஆர்ஏ சட்டத்தின் விதிமுறைகள் ஆகியன மீறப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சங்கூர் பாபாவுக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். சங்கூர் பாபா மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள் பெற்ற பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறியும் வகையில் விசாரணை நடந்து வருகிறது. இ்த பணத்தை வைத்து தான் சட்டவிரோத மதமாற்றத்திற்கும், சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி இருக்கலாம் என அமலாக்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சங்கூர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் நகல், அவருடன் கைது செய்யப்பட்ட நபர்கள், வங்கிக்கணக்குகள் ,அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த விவரங்களை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் கேட்டுள்ளனர். மேலும், மாவட்ட கலெக்டர் மற்றும் வங்கி அதிகாரிகளிடமும் அவரின் சொத்து குறித்த விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன.

