கைது நடவடிக்கை: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
கைது நடவடிக்கை: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
UPDATED : மே 16, 2024 01:34 PM
ADDED : மே 16, 2024 12:01 PM

புதுடில்லி: ‛‛ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது '' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமின் மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் உஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனின்படி குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜர் ஆனால், அவர் கஸ்டடியில் உள்ளதாக கருதக்கூடாது.
அவரை கஸ்டடியில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி பெற வேண்டும். அதற்காக அமலாக்கத்துறை கூறும் காரணங்கள் திருப்தி அளித்தால் மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் கீழ் ஆஜரானவர்கள், ஜாமினுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.