பண மோசடி செய்த வெளியுறவு அதிகாரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது ஈ.டி.,
பண மோசடி செய்த வெளியுறவு அதிகாரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது ஈ.டி.,
ADDED : நவ 28, 2024 12:45 AM
புதுடில்லி,
பண மோசடி வழக்கில், வெளியுறவு அதிகாரி நீஹரிகா சிங், அவரது கணவர் அஜித் குமார் குப்தா ஆகியோர் மீது, சிறப்பு நீதிமன்றத்தில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில், 2019ல், வெளியுறவு அதிகாரி நீஹரிகா சிங், அவரது கணவர் அஜித் குமார் குப்தா ஆகியோர், தங்களது நிறுவனங்கள் வாயிலாக முதலீட்டு திட்டத்தை துவங்கினர்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் தருவதாக, அவர்கள் ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிமக்கள் முதலீடு செய்தனர். 2020 பிப்., - 2020 அக்., வரையிலான காலத்தில் மட்டும், 110 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.
அஜித் குமார் குப்தா, தன் நெருங்கிய கூட்டாளிகளுடன் இணைந்து, பல்வேறு முதலீடு திட்டங்களை துவங்கினார். இதிலும் 60 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர்.
முதலீடு செய்த பணத்தை பற்றி கேட்ட போது, நீஹரிகா சிங், அஜித் குமார் குப்தா முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதலீட்டாளர்கள், இது குறித்து லக்னோ போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதன்படி, நீஹரிகா சிங், அவரது கணவர் அஜித் குமார் குப்தா, அவரது நிறுவனங்கள் மீது, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையில், முதலீட்டாளர்களின் பணத்தில், நீஹரிகா சிங், அஜித் குமார் குப்தா ஆகியோர், அடுக்குமாடி குடியிருப்பு, நிலம் போன்றவை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் குறித்து வழக்குப் பதிந்த அமலாக்கத் துறையினர், இது தொடர்பாக, வெளியுறவு அதிகாரி நீஹரிகா சிங், அஜித் குமார் குப்தா ஆகியோரிடம் பல முறை விசாரணை நடத்தினர்.
லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், பண மோசடி தொடர்பாக, நீஹரிகா சிங், அஜித் குமார் குப்தா, அவரது நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறையினர் செப்., 2ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதை விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக, அமலாக்கத் துறையினர் நேற்று தெரிவித்தனர்.