ஆதாரமின்றி பண மோசடி வழக்கு; ஈ.டி.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்
ஆதாரமின்றி பண மோசடி வழக்கு; ஈ.டி.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : ஜன 23, 2025 01:37 AM

மும்பை: மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராகேஷ் ஜெயின் என்பவர் மீது போதிய ஆதாரங்கள் இல்லாமல் பணமோசடி விசாரணையைத் துவங்கிய ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த மும்பை உயர் நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் கட்டுமான அதிபர் ராகேஷ் ஜெயின். இவர், மும்பையின் மலாட் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் கட்டி உள்ளார். இதில், சில தளங்களை குல் அச்ரா என்பவர் ஹோட்டல் அமைப்பதற்காக வாங்கினார்.
நம்பிக்கை மோசடி
அந்த கட்டடத்தின் பணி நிறைவு சான்றிதழை பெற்று வழங்குவதில் ராகேஷ் ஜெயின் தாமதம் செய்ததாக குல் அச்ரா போலீசில் புகார் கூறினார்.
'கட்டடத்தின் உள்ளே குல் அச்ரா செய்யும் சில கட்டுமான வேலைகளால் தான் பணி நிறைவு சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டது' என ரியல் எஸ்டேட் அதிபர் ராகேஷ் ஜெயின் விளக்கம் அளித்தார்.
இதனால், 'இது சிவில் வழக்காக தெரிகிறது' என கூறி மும்பை போலீசார் வழக்கு பதிய மறுத்தனர்.
இதையடுத்து குல் அச்ரா, அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாடி, வழக்கு பதிய மும்பை போலீசாருக்கு உத்தரவிடும்படி கோரினார். இது குறித்து விசாரிக்க மும்பையின் வில்லே பார்லே போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து குல் அச்ரா புகாரின் படி, அவரிடம் மோசடியாக பெற்ற பணத்தில் ராகேஷ் ஜெயின் அந்தேரியில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்த அமலாக்கத் துறையினர், ராகேஷ் ஜெயினின் சொத்துக்களை முடக்கினர். இதை எதிர்த்து ராகேஷ் ஜெயின் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி மிலிந்த் ஜாதவ் அளித்த தீர்ப்பு:
ஒப்பந்த மீறல் தொடர்பான இந்த வழக்கு சிவில் இயல்புடையது என மும்பை போலீசார் கூறிய போதும் குல் அச்ரா அதை மறைத்து அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன் புகாரை வில்லே பார்லே போலீசார் விசாரிக்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார்.
அவர் மனதில் தீய நோக்கம் இருந்தது இதில் தெளிவாகிறது. ஒப்பந்தத்தை மீறுவது கிரிமினல் நம்பிக்கை மோசடி என்ற குற்றச்சாட்டின் கீழ் வராது.
துன்புறுத்த முடியாது
மேலும், வில்லே பார்லே போலீசுக்கு அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. எனவே, போலீசார் பதிந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
அதனடிப்படையில் அமலாக்கத் துறை பதிந்த வழக்கும் செல்லாதது. பணமோசடி தடுப்புச் சட்டம் என்ற போர்வையில் நடக்கும் அடக்குமுறைக்கான சிறந்த உதாரணம் இந்த வழக்கு. அமலாக்கத் துறையினர் சட்ட விதிகளின் படி செயல்பட வேண்டும், சட்டத்தை கையில் எடுத்து குடிமக்களை துன்புறுத்த முடியாது.
இந்த செய்தியை அமலாக்கத் துறைக்கு அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டி இருப்பதால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.