கெஜ்ரிவாலுக்கு வந்தது புது சிக்கல்: வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு கவர்னர் அனுமதி!
கெஜ்ரிவாலுக்கு வந்தது புது சிக்கல்: வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு கவர்னர் அனுமதி!
UPDATED : டிச 21, 2024 10:22 PM
ADDED : டிச 21, 2024 03:39 PM

புதுடில்லி: மதுபானக் கொள்கையில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு கவர்னர் சக்சேனா அனுமதி வழங்கி உள்ளார்.
டில்லியில் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி முக்கிய நிர்வாகிகளான எம்.பி., சஞ்சய் சிங், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகினர். கடந்த ஆண்டு முதல்வராக இருந்த கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.ஆறு மாதம் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. இந்த நிபந்தனைகள் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலகினார்.
இந்நிலையில், மதுபானக் கொள்கையில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவால் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினா். ஆனால், அதன் மீதான விசாரணை துவங்காமல் இருந்தது. அரசு பதவியில் இருப்பவர்கள் மீது அரசின் அனுமதி இல்லாமல், வழக்குப்பதிவு செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர டில்லி கவர்னரின் அனுமதியை பெற வேண்டிய நிலை அமலாக்கத்துறைக்கு ஏற்பட்டது. கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு கவர்னர் சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு கவர்னர் விகே சக்சேனா அனுமதி அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக டில்லி முதல்வர் அதிஷி கூறியதாவது: கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர கவர்னர் அனுமதி அளித்து இருந்தால் அதற்கான கடிதத்தை அமலாக்கத்துறை வெளியிட வேண்டும். உண்மையான விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்பவும் பா.ஜ., சதி செய்கிறது என்றார்.
மணீஷ் சிசோடியா கூறுகையில், அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் கருத்து தொடர்பான விவகாரத்தில் இருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சி இது எனக்குற்றம்சாட்டினார்.