ஏலத்திற்கு வருகிறது மெஹூல் சோக்சியின் சொத்து: அமலாக்கத்துறை நடவடிக்கை
ஏலத்திற்கு வருகிறது மெஹூல் சோக்சியின் சொத்து: அமலாக்கத்துறை நடவடிக்கை
ADDED : நவ 24, 2025 09:45 PM

புதுடில்லி: வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹூல் சோக்சியின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் அந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவற்றில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு பிரபல வைர வியாபாரிகள் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹூல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டுத் தப்பியோடினர். இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களின் சொத்துக்களை முடக்கி உள்ளனர். மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த வழக்குகள் பெல்ஜியம் நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில் மெஹூல் சோக்சியின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் அமலாக்கத்துறை சொத்துகளை ஒப்படைத்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள இந்தச் சொத்துக்கள் மும்பையின் புறநகரில் உள்ள போரிவலி நகரில் அமைந்துள்ளன. கடந்த 21ம் தேதியே இந்தச் சொத்துகள் அந்த அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மெஹூல் சோக்சியிடம் ஏமாந்தவர்கள் நிவாரணம் பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 310 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

