சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை
UPDATED : செப் 02, 2024 12:42 PM
ADDED : செப் 02, 2024 09:38 AM

புதுடில்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது.
ஆம்ஆத்மியின் எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் டில்லி வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தபோது சட்டவிரோத ஆட்சேர்ப்பு மற்றும் நிதி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இன்று(செப்.,01) அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து, அமானதுல்லா கானை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பயப்பட மாட்டோம்!
முன்னதாக, சமூகவலைதளத்தில், ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: ஆம்ஆத்மி அதிகாரத்திடம் குனியவோ, பயப்படவோ போவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, போலி வழக்குகளை பதிவு செய்து அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது. அமலாக்கத்துறை தனக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சிக்கும் சில பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. இப்போது தேடல் வாரண்ட் என்ற பெயரில் என்னை கைது செய்ய அமலாக்கத்துறை எனது வீட்டிற்கு வந்துள்ளது.
சிறைக்கு அனுப்ப சதி
என் மாமியார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்கள் என்னை கைது செய்து எங்கள் வேலையை நிறுத்த வேண்டும் நினைக்கிறார்கள். எங்களை சிறைக்கு அனுப்புவார்கள். நீதிமன்றத்தில் இந்த முறையும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அமானதுல்லா கான் கூறியுள்ளார்.
போக்கிரித்தனம்
இது தொடர்பாக, பதிலளிக்கும் வகையில், கட்சியின் மூத்த தலைவரும்,எம்.யு.,யுமான சஞ்சய் சிங் கூறியதாவது: 'அமானதுல்லா கானுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பா.ஜ.,வின் சர்வாதிகாரம் மற்றும் அமலாக்கத்துறையின் போக்கிரித்தனம் இரண்டும் தொடர்கின்றன' என குற்றம்சாட்டியுள்ளார்.