சித்தராமையா மனைவிக்கு எதிரான ஈ.டி., மனு தள்ளுபடி; ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
சித்தராமையா மனைவிக்கு எதிரான ஈ.டி., மனு தள்ளுபடி; ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : ஜூலை 22, 2025 01:33 AM

பெங்களூரு: 'முடா' வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவிக்கு, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. 'அரசியல் போரை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறி, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
'முடா' எனப்படும், மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் நிலத்தை 1998ல் கையகப்படுத்தியது. சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு 50:50 விகிதத்தின் கீழ், 50 சதவீதம் நிலம்; 50 சதவீதம் பணம் வழங்குகிறது.
அந்த வகையில் மைசூரு விஜயநகர் பகுதியில் 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகள் மாற்றாக வழங்கப்பட்டன.
கவர்னர் அனுமதி
இந்த விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா அனுமதி கோரினார்.
இதுதொடர்பாக சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி, நில உரிமையாளர் தேவராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டார்.
நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. 'நான்கு பேரும் குற்றமற்றவர்கள்' என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் தனக்கு கிடைத்த 14 வீட்டுமனைகளையும், 'முடா'விடமே, பார்வதி திரும்ப ஒப்படைத்தார்.
தன் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து, சித்ராமையா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி நாக பிரசன்னா, 'கவர்னர் அளித்த அனுமதி செல்லும்' என தீர்ப்பு கூறினார்.
நோட்டீஸ்
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, இரு நீதிபதிகள் அமர்வில் சித்தராமையா மேல்முறையீடு செய்தார். அதன் மீது விசாரணை நடக்கிறது.
இதற்கிடையில் 'முடா' வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்கு ஆஜராகும்படி, சித்தராமையா மனைவி பார்வதி மற்றும் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, அமலாக்கத்துறை வழங்கிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஈ.டி., தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
அரசியல் காழ்ப்புணர்ச்சியை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற நடவடிக்கையில் அமலாக்கத் துறையினர் ஏன் ஈடுபடுகின்றனர்? தயவுசெய்து உங்களை விமர்சிக்க வைக்காதீர்கள்.
இல்லையெனில, அமலாக்கத் துறை பற்றி நாங்கள் மிகவும் கடுமையாக பேச வேண்டியிருக்கும். உங்கள் அரசியல் போராட்டத்தை வாக்காளர்கள் முன்னிலையில் நடத்துங்கள். அதற்கு அமலாக்கதுறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது, அமலாக்கத் துறை சார்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகையில், 'சரி, நாங்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் வாங்குகிறோம். இதை வைத்து கடும் விமர்சனம் வேண்டாம்' என்றார்.
தெரியவில்லை
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'உயர் நீதிமன்ற நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. வழக்கின் சூழ்நிலையை கருத்தில் வைத்து, அமலாக்கத் துறை பற்றி குறிப்பிட்டோம்.
'அமலாக்கத் துறை மீது கடுமையான கருத்துகளை சொல்ல அனுமதிக்காத கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நன்றி' என்றனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது எங்களுக்கு தெரியாது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பா.ஜ., - ம.ஜ.த.,வின் போலியான நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. ஈ.டி.,யை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த கூடாது என்று, 'சம்மட்டியால்' அடித்தது போல உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது வரவேற்கத்தக்கது. - பைரதி சுரேஷ் கர்நாடக அமைச்சர், நகர மேம்பாட்டு துறை
முதல்வர் வரவேற்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கை: என் இதயத்தில் இருந்த வார்த்தைகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேசி உள்ளார். மன ரீதியாக எனக்கு அளித்த கொடுமையை நான் என்றும் மறக்கமாட்டேன். இனியாவது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இந்த அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.