அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம்; 8 மணி நேரமாக எண்ணும் பணி!
அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம்; 8 மணி நேரமாக எண்ணும் பணி!
ADDED : மார் 31, 2025 11:51 AM

பாட்னா: பீஹார் அமலாக்கத்துறை சோதனையில் ரூ.11.64 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 4 இயந்திரங்களைப் பயன்படுத்தி 8 மணி நேரம் இடைவிடாமல் அதிகாரிகள் எண்ணும் பணி மேற்கொண்டனர்.
பீஹார் மாநிலத்தில் கட்டட கட்டுமானத் துறையின் தலைமைப் பொறியாளர் தாரிணி தாஸின் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ.11.64 கோடி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ஒரு நாளுக்குப் பிறகு தாரிணி தாஸை பீஹார் அரசு பணிநீக்கம் செய்தது. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஞ்சீவ் ஹான்ஸுடன் தொடர்புடைய பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
1997ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பீஹார் எரிசக்தித் துறையின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான ஹான்ஸ் மீதான வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் ஊழல் அம்பலம் ஆனது.
சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபடுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடத்தினர். தாஸின் பங்களாவுக்குள் நுழைந்ததும், பல அறைகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பறிமுதல் செய்த பணத்தை, 4 இயந்திரங்களைப் பயன்படுத்தி 8 மணி நேரம் இடைவிடாமல் அதிகாரிகள் எண்ணும் பணி மேற்கொண்டனர். ஓய்வுக்குப் பிறகு பணி நீட்டிப்பில் இருந்த தாஸ், தற்போது துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார்.