ADDED : ஆக 14, 2025 01:11 AM
பெங்களூரு: கர்நாடகாவின் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., ஆக இருப்பவர் சதீஷ் கிருஷ்ண சைல்.
இந்த தொகுதியில் உள்ள பெலேகரி துறைமுகம் வாயிலாக சட்டவிரோதமாக இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்த வழக்கில் சைல் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.
சட்டவிரோத ஏற்றுமதியால், அரசுக்கு 38 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும், ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்பு தாதுவின் உண்மையான மதிப்பு நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
பெல்லாரியில் இருந்து பெலேகரி துறைமுகத்துக்கு 8 லட்சம் டன் இரும்பு தாது சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதை கடந்த 2010ல் விசாரித்த லோக் ஆயுக்தா கண்டு பிடித்தது.
முன்னதாக சட்டவிரோதமாக இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்தது தொடர்பான பல்வேறு வழக்குகளில் காங்.,- எம்.எல்.ஏ., சைல் உள்ளிட்டோரை குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கில் சைலுக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறை தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது.
இந்நிலையில், எம்.எல்.ஏ., மீதான சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் பண மோசடி தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பான வழக்கில் கர்நாடகா, கோவா, மும்பை உட்பட எம்.எல்.ஏ., மற்றும் சிலருக்கு தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

