அமைச்சர் சிராக் பஸ்வானின் நண்பர் வீட்டில் ஈ.டி., ரெய்டு
அமைச்சர் சிராக் பஸ்வானின் நண்பர் வீட்டில் ஈ.டி., ரெய்டு
ADDED : டிச 27, 2024 11:35 PM

பாட்னா: மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜன்சக்தி ராம் விலாஸ் கட்சி தலைவருமான சிராக் பஸ்வானுக்கு நெருக்கமான நண்பர் ஹுலாஸ் பாண்டேவின் வீடு, அலுவலகங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை, சோதனை நடத்தியது.
பீஹாரில் செயல்படும் லோக் ஜன்சக்தி ராம் விலாஸ் கட்சி, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது.
அக்கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். முன்னாள் எம்.எல்.சி., ஹுலாஸ் பாண்டே, இவருக்கு நெருக்கமானவர். இந்நிலையில், பாட்னாவில் ஹுலாஸ் பாண்டேவின் வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதே போல், டில்லியிலும், கர்நாடகாவின் பெங்களூரிலும் சோதனை நடந்தது. இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நிதி முறைகேடு தொடர்பாக சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கு விபரங்களை அமலாக்கத் துறையினர் தெரிவிக்கவில்லை.

