கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர் கல்லுாரிகளில் ஈ.டி., 'ரெய்டு'
கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர் கல்லுாரிகளில் ஈ.டி., 'ரெய்டு'
ADDED : மே 22, 2025 02:51 AM

பெங்களூரு,: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கல்லுாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மூத்த தலைவரான பரமேஸ்வர், உள்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இவர், துமகூரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லுாரி, ஸ்ரீ சித்தார்த்தா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நெலமங்களா டி.பேகூரில் ஸ்ரீ சித்தார்த்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகிய மூன்று கல்லுாரிகளை நடத்துகிறார்.
பரமேஸ்வரின் மருத்துவக் கல்லுாரியில், அதிக பணம் வாங்கிக் கொண்டு மருத்துவ சீட் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், 2019ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பரமேஸ்வரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பின், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வருமான வரி அதிகாரிகள் தொல்லையால், ரமேஷ் தற்கொலை செய்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பின், வருமான வரி அதிகாரிகள் விசாரணை அப்படியே நிறுத்தப்பட்டது.
தங்கள் சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு, வருமான வரி அதிகாரிகள் தகவல் கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, பரமேஸ்வருக்கு சொந்தமான மூன்று கல்லுாரிகளிலும், 30க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கல்லுாரிகளின் அலுவலக அறைகளுக்கு சென்று, அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். மாலை வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.