கெஜ்ரிவால் மீதான ஈ.டி., வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
கெஜ்ரிவால் மீதான ஈ.டி., வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
ADDED : நவ 21, 2024 09:22 PM
இந்தியா கேட்:முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஈ.டி., தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2021 நவம்பர் 17ல் புதிய கலால் கொள்கைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு அமல்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, 2022 செப்டம்பர் இறுதியில் அதை ரத்து செய்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்ததை அடுத்து, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அணுகி உள்ளார்.
தன் மனுவில் அனுமதி பெறப்படாமல் தன் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்ததால், விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரினார்.
இந்த வழக்கு நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனர் துஷார் மேத்தா, முறையான அனுமதி பெற்றே வழக்கு தொடரப்பட்டதாகவும் அதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கெஜ்ரிவாலின் வழக்கறிஞர், முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி இதை நிராகரித்த நீதிபதி, டிசம்பர் 20ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
அமலாக்கத்துறை வழக்கி விசாரணை நீதிமன்றத்தில் டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரும்போது, நேரில் ஆஜராவதில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விலக்கு அளிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதியிடம் முறையிடப்பட்டது.
இந்த கோரிக்கையை விசாரணை நீதிமன்றத்திலேயே வைக்கலாம் எனக்கூறி இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணையை நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி ஒத்திவைத்தார்.