'எடிட்டிங் மாஸ்டர் முதல்வர் சித்தராமையா' மோடியை விமர்சித்ததற்கு பா.ஜ., பதிலடி
'எடிட்டிங் மாஸ்டர் முதல்வர் சித்தராமையா' மோடியை விமர்சித்ததற்கு பா.ஜ., பதிலடி
ADDED : ஜன 18, 2024 05:12 AM
பெங்களூரு: ''பிரதமர் மோடி துாங்கிக் கொண்டு இருக்கிறார்,'' என விமர்சித்த முதல்வர் சித்தராமையாவை, 'எடிட்டிங் மாஸ்டர்' என, பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.
முதல்வர் சித்தராமையா தன்னுடைய 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி துாங்குவது போன்று, போட்டோ ஷாப்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, ''பிரதமர் மோடி தனது தனிப்பட்ட பிரச்னை, பா.ஜ., பிரசாரத்திற்காக எப்போதும் விழித்து இருப்பார்.
ஆனால் கர்நாடகா தொடர்பான பிரச்னை என்றால், துாங்கிக் கொண்டு இருப்பார். புறக்கணிப்பு... புறக்கணிப்பு... துாங்குதல்... ரீபிட். இது தான் அவரது மந்திரம்.
துாக்கத்தில் இருந்து எழுந்திருங்கள் பிரதமர் மோடி அவர்களே... பிரதமர் நன்றாக துாங்கிக் கொண்டு, கர்நாடகா மக்களுக்கு துாக்கமில்லா இரவைக் கொடுத்துள்ளார்,'' என, பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவை பார்த்த பா.ஜ., தலைவர்கள், சித்தராமையாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கர்நாடகா பா.ஜ.,வின் 'எக்ஸ்' பக்கத்தில், ''உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தினமும் 18 முதல் 20 மணி நேரம், மக்களுக்காக பணியாற்றுகிறார்.
ஆனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மக்கள் பணியை மறந்துவிட்டு, போட்டோ ஷாப் பணியில் ஈடுபட்டுள்ளார். எடிட்டிங் செய்வதில் அவர் மாஸ்டர்,'' என, பதிவிடப்பட்டு இருந்தது.
பொது விவாதத்திற்கு தயார்
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
மத்திய அரசு கர்நாடகா, கன்னடர்களுக்கு இழைக்கும் அநீதிகளை பற்றி, நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இதற்கு பதில் சொல்ல வேண்டியது பிரதமர் நரேந்திர மோடி தான். பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இல்லை. பிரதமர் மோடியே தேதி, இடம் நிர்ணயித்துக் கொடுத்தால், அவரிடம் பொது விவாதம் நடத்த தயார்.
வறட்சி நிவாரண பணிகளுக்காக 18,177 கோடி ரூபாய் கேட்டு வருகிறோம். நானே நேரில் சென்று, பிரதமர் மோடியை சந்தித்து, விவசாயிகள் கஷ்டங்களை கூறினேன். இதுவரை ஒரு பைசா கூட, நிவாரணம் விடுவிக்கவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 14வது நிதி கமிஷன் மூலம், கர்நாடகாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட 4.72 சதவீதம் வரி பங்கு வந்தது. ஆனால் பா.ஜ., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட 15 வது நிதிக்குழுவால், கர்நாடகாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட, வரி பங்கு 3.64 சதவீதமாக குறைக்கப்பட்டது.
கனவாகவே உள்ளது
கர்நாடகாவில் செயல்படுத்தப்படும், மத்திய அரசின் கூட்டுறவு திட்டங்களுக்கு வழங்கப்படும், மானியங்கள் ஆண்டுதோறும் குறைக்கப்படுகின்றன.
கர்நாடகாவுக்கு 5,495 கோடி ரூபாய், மானியம் வழங்க 15 வது நிதி கமிஷன் பரிந்துரை செய்தும், அந்த பரிந்துரையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புறக்கணித்தார். கிருஷ்ணா மேலணை, மகதாயி திட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
கன்னடர்களின் எய்ம்ஸ் கனவு இன்னும் கனவாகவே உள்ளது. நமது முன்னோர்கள் கடுமையாக உழைத்து கட்டிய, விமான நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது.
பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 18,000 கோடி ரூபாய், நிதி இல்லாமல் முடங்கி உள்ளது. கர்நாடகாவின் ரயில்வே திட்டங்கள் மூலையில் போடப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவிற்கும் பா.ஜ., தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.