முயற்சி திருவினையாக்கும்; சோதனைகளை வென்று சாதனையாக மாற்றிய கபிலன்!
முயற்சி திருவினையாக்கும்; சோதனைகளை வென்று சாதனையாக மாற்றிய கபிலன்!
UPDATED : டிச 15, 2024 12:31 PM
ADDED : டிச 15, 2024 10:41 AM

டேராடூன்: மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கபிலன், வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட போதிலும், விடாமுயற்சியுடன் போராடி வென்று, ராணுவத்தில் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில், பயிற்சி முடித்த 456 புதிய ராணுவ அதிகாரிகள் அணிவகுப்பு நடந்தது. அப்போது ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. அதன் விபரம் வருமாறு: மதுரைக்கு அருகிலுள்ள மேலூரில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கபிலன். பெற்றோர் கூலி வேலை பார்த்து வந்தனர். அரசு பள்ளியில் படித்த கபிலன், தன் முயற்சியால் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
அவருக்கு ராணுவத்தில் அதிகாரியாக சேர வேண்டும் என்பது தீராத வேட்கை.
அதற்காக தொடர்ந்து முயற்சித்தார். ஒவ்வொரு முறையும் அவருக்கு சோதனைகள் வந்து கொண்டே இருந்தன. அவரது தாயாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் உயிரிழந்தார். கூலி வேலை பார்த்து வந்த தந்தைக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டது.
சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார் தந்தை. அவருக்கு சிகிச்சை அளிப்பதுடன், குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் கபிலன். இப்படி பலப்பல சோதனைகளையும் எதிர்கொண்ட அவர், அனைத்தையும் வெற்றி கொண்டு ராணுவ சேர்க்கை தேர்வில் வெற்றி பெற்றார்.
டேராடூன் ராணுவ அகாடமி பயிற்சி நிறைவு விழாவில், சக்கர நாற்காலியில் வந்திருந்த தந்தை, இறந்து போன தாயாரின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படத்துடன் தன் வெற்றியை கொண்டாடினார் கபிலன்.
இது குறித்து, லெப்டினன்ட் கபிலன் கூறியதாவது: தைரியம் என்னை ஊக்குவிக்கிறது. நான் பல முறை தோல்வியுற்றேன். ஆனால் நான் ராணுவத்தில் சேர வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன். நான் அதைச் தற்போது செய்தேன். இது எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; இது இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. தினமும் 100 ரூபாய் சம்பாதித்த ஒரு தினக்கூலித் தொழிலாளியின் மகனான என்னைப் போன்ற ஒருவரால் அதைச் செய்ய முடியும் என்றால், அனைவராலும் முடியும்.
நான் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைக்குச் செல்வேன், வீடு திரும்பிய பிறகு, மாலை 6 முதல் இரவு 10 மணி வரை படிப்பேன். இவர் அவர் கூறினார். அதுமட்டுமின்றி கபிலனின் இளைய சகோதரர், இனியவன், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.