சீனாவுடன் பேச்சுவார்த்தையை தொடர முயற்சி: ராணுவ தளபதி
சீனாவுடன் பேச்சுவார்த்தையை தொடர முயற்சி: ராணுவ தளபதி
ADDED : ஜன 11, 2024 01:30 PM

புதுடில்லி: எல்லையில், 2020ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையை ஏற்படுத்த சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடர முயற்சி செய்து வருகிறோம் என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியதாவது: காஷ்மீர் சூழ்நிலை கவலைக்குரியதாக இருந்தாலும், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைதி நிலவுகிறது.ட்ரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான வலுவான கொள்கை பின்பற்றப்படுகிறது. ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கு எல்லை தாண்டி உதவி கிடைக்கிறது.
இப்பகுதிகளில், கடந்த 5 - 6 மாதங்களில் பயங்கரவாத செயல்கள் மற்றும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. 2003ல் இங்கு பயங்கரவாதம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 2018 வரை அமைதி நிலவியது. ஆனால், இதனை பொறுக்காத நமது எதிரிகள், அங்கு மறைமுகமாக பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கின்றன. ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது.
எல்லையில் 2020க்கு முன்பு இருந்த நிலையை திரும்புவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வதே எங்களின் முயற்சியாகும். இதில் தீர்வு கிடைத்தால் மட்டுமே, படைகளை திரும்ப பெற முடியும். அதுவரை எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தேவைப்படும் இடங்களில் படைகளை நிலைநிறுத்துவோம்.
பொருளாதார ரீதியில் நமது நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. இதற்கு உதவும் வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்ய பணியாற்றி வருகிறோம்.
அரசின் கொள்கை காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகின்றன. கடந்த ஆண்டு மணிப்பூரில் கலவரம் நடந்தாலும், மாநில நிர்வாகம், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையுடன் இணைந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் பணியாற்றி வருகிறோம்.
ராணுவத்தில் புதிய தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. சிறந்த வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஆகியவையும் ராணுவத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மனோஜ் பாண்டே கூறினார்.

