முட்டை விலை தொடர்ந்து ஏற்றம் தலைமை ஆசிரியர்கள் தடுமாற்றம்
முட்டை விலை தொடர்ந்து ஏற்றம் தலைமை ஆசிரியர்கள் தடுமாற்றம்
ADDED : டிச 31, 2024 05:26 AM
பெங்களூரு: ''மாநிலத்தில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால், சத்துணவுடன் பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
''இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரிலோக் சந்திரா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை 53.21 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இதில் 35.04 லட்சம் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவுடன் தலா ஒரு முட்டை வழங்கப்படுகிறது. 5.55 லட்சம் மாணவர்களுக்கு வாழைப் பழங்களும், 7.79 லட்சம் மாணவர்களுக்கு கொண்டக்கடலையும் வழங்கப்படுகிறது.
நிதி பங்கீடு
இதற்கான செலவில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் பகிர்ந்து கொள்கின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளை கொள்முதல் செய்வது, வினியோகிப்பது ஆகியவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பில் பள்ளிக் கல்வித்துறை ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாகவே முட்டை விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலையில், வழக்கமாக ஒரு முட்டை 5.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த மூன்று, நான்கு மாதங்களாக ஒரு முட்டை 6.50ல் இருந்து 7.00 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
ஆனால், மாணவர்களுக்கு ஒரு முட்டைக்கு 6.00 ரூபாய் மட்டுமே கல்வித்துறை வழங்குகிறது. இதனால், கூடுதல் தொகை தேவைப்படுகிறது.
இந்த தொகையை கல்வித்துறையிடம் இருந்து பெற முடியாது என்பதால், தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
6 நாள் முட்டை
முன்பெல்லாம் வாரம் இரண்டு நாட்கள் மட்டும் சத்துணவுடன் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 25ம் தேதியில் இருந்து அஜிம் பிரேம்ஜி என்ற அறக்கட்டளையுடன் கல்வி துறை செய்துள்ள ஒப்பந்தப்படி, தற்போது வாரம் ஆறு நாட்கள் முட்டை வழங்கப்படுகின்றன.
இதனால், முட்டைகளின் தேவை அதிகமாகிறது. ஆனால், தேவைக்கேற்ற முட்டை வரத்து இல்லை என்பதால், செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி, விற்பனையாளர்கள் முட்டை விலையை உயர்த்தி விற்கின்றனர்.
இதனால், மாணவர்களுக்கு முட்டை கொள்முதல் செய்யும் பொறுப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் தடுமாறுகின்றனர்.
இதனால் முட்டை கொள்முதல், சப்ளையை தனியார் ஏஜென்சியிடம் விட்டு விடுங்கள் என்று பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மாணவர்கள் படிப்பில் முட்டை வாங்காமல் இருக்க பாடுபடும் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், அவர்களுக்கு சத்துணவில் வழங்கும் முட்டையை கொள்முதல் செய்வதற்கு சிரமப்படுகின்றனர்.