ரவுடி பாம்பே சலீம் உட்பட 8 பேர் கைது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு
ரவுடி பாம்பே சலீம் உட்பட 8 பேர் கைது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு
ADDED : பிப் 16, 2025 10:17 PM

சிக்கபல்லாபூர் : ஆள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ரவுடி பாம்பே சலீம் உட்பட எட்டு பேரை பாகேபள்ளி போலீசார் கைது செய்தனர். சிக்கபல்லாபூர் சிறையில் அடைப்பதற்கு அங்குள்ள அதிகாரிகள் அனுமதிக்காததால், அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தென் மாநிலங்களில், போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர், பாம்பே சலீம், 43. இவர், தன் 12 வயதில் இருந்தே, குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்து உள்ளார். குறிப்பாக, சிறுவனாக இருக்கும் போதே, ஒரு கடைக்காரரை கொலை செய்தார்.
இதனால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து தப்பி, வெளியில் வந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
பின், மீண்டும் சிறைக்கு செல்வதும், வெளியில் வந்து குற்றங்கள் செய்வதுமாக வாழ்க்கையை நகர்த்தி உள்ளார். இவர் மீது 40 க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள், 20 க்கும் மேற்பட்ட ஆள் கடத்தல், ஐந்து கொலை வழக்குகள் உள்ளன. பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலும், ஆள் கடத்தல் தான் கைவந்த கலையாக இருந்து உள்ளது.
இவர், சிக்கபல்லாபூர் கங்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அஸ்வத்நாராயணசாமி என்பவரை, கடந்த 2024 டிசம்பர் 20ல் கடத்தினார்.
அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்தார். இது மட்டுமின்றி, அவரது மனைவியிடம் 50 லட்சம் ரூபாய் கேட்டு உள்ளார். இது குறித்து பாகேபள்ளி போலீசார் விசாரித்தனர். கடந்த சில மாதங்களாக பாம்பே சலீமை தேடி வந்தனர்.
இந்நிலையில், பாம்பே சலீம், அவரது கூட்டாளிகளான ஆந்திராவின் அனில், கர்நாடகாவின் ராஜனுகுன்டேயின் சேத்தன், ரவுடி நாகேஷ், பாகேபள்ளியின் ரவுடி சேத்தன், பாபு ரெட்டி, பெங்களூரின் ரவுடி வாசிம், அஸ்லம் ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
எந்த சிறையில் பாம்பே சலீம் அடைக்கப்பட்டாலும், அங்கு தனக்கு ஆதரவாக ஒரு கும்பலை உருவாக்கி செயல்படுவார் என அவர் மீது கரும்புள்ளி உள்ளது.
இதனால், சிக்கபல்லாபூர் சிறையில் அவரை அடைப்பதற்கு, அங்குள்ள சிறை அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. இதனால் பாம்பே சலீமும், அவரது கூட்டாளிகளும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.