ADDED : பிப் 13, 2024 01:10 AM

ராய்ச்சூர்,மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஏட்டு மீது தாக்குதல் நடத்தியதாக, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கரெம்மாவின் மகன் உட்பட 10 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் கரெம்மா நாயக்.
நேற்று முன்தினம் மாலை, தேவதுர்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சிலர், டிராக்டரில் மணல் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்தது. தேவதுர்கா போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ஹனுமந்தராயா நாயக், அங்கு சென்று மணல் கடத்தலை தடுக்க முற்பட்டார்.
அப்போது, எம்.எல்.ஏ., கரெம்மாவின் மகன் சந்தோஷ், அவரது உதவியாளர் ரபி உள்ளிட்ட சிலர், ஏட்டு ஹனுமந்தராய நாயக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஏட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதற்கு முன், எம்.எல்.ஏ., கரெம்மா, மணல் கடத்தலுக்கு எதிராக குரல் எழுப்பினார். முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, புகாரும் அளித்திருந்தார்.
அதில், 'மணல் கடத்தலை தடுக்க சென்ற என் மீது, லாரி ஏற்றிக் கொல்ல முயற்சித்தனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று தெரியவில்லை. அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர்' என, தெரிவித்திருந்தார்.
தற்போது கரெம்மாவே, தன் மகன் வாயிலாக மணல் கடத்தலை துாண்டுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தாக்கப்பட்ட ஏட்டு கொடுத்த புகாரின்படி, கரெம்மாவின் மகன், அவரது உதவியாளர் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.