ADDED : மே 13, 2025 10:14 PM
பாலம்:பாலம் விமானப்படை நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு மயில் இறந்ததாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மயில் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. எனினும் வெப்பம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஏழு நாட்களாக வெப்பநிலை சராசரியை விடக் குறைவாக இருப்பதால், மயில் மரணம் சந்தேகத்தை எழுப்பியது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:
கடந்த நான்கரை மாதங்களில் இதுவரை எட்டு மயில்கள் உயிரிழந்துள்ளன. கடந்த ஆண்டில் இதே கோடை வேளையில் 30 மயில்கள் அதீத வெயிலால் உயிரிழந்தன. இதையடுத்து தண்ணீர் தேவை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் மயில் இறப்பு குறித்த காரணம் தெளிவாகவில்லை. ஒரு மயில் கூட பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்பதே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.