ADDED : பிப் 14, 2025 05:33 AM

பலரும் கிரிக்கெட்டை விரும்பிய காலகட்டத்தில், சைக்கிளிங் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு, இந்திய சைக்கிளிங் போட்டியில் சாதனை புரிந்து, கர்நாடகாவில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான, 'ஏகலைவா' விருது பெற்றவர் ஸ்ரீதர் சாவனுார்.
பாகல்கோட் மாவட்டம், ஜம்கண்டியில் 1994ல், விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீதர் சாவனுார். இந்தியாவில் முதல் சிறந்த ஐந்து சைக்கிளிங் விளையாட்டு வீரர்களில் ஒருவராவார். உடல் ஆரோக்கியத்தில் நாட்டம் கொண்ட இவர், சைக்கிளில் செல்வதை விருப்பமாக கொண்டிருந்தார்.
இதையே தன் திறமையை வெளிப்படுத்தும் மேடையாக அமைத்து கொண்டார். தன் 16 வயதில், ஒன்பது தங்கம், ஐந்து வெள்ளி, ஆறு வெண்கல பதக்கங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. சைக்கிளிங் போட்டிகளில், 2011 முதல் பங்கேற்பதையே தன் முழுநேர தொழிலாக மாற்றிக் கொண்டார்.
பாட்டியாலாவில் நடந்த பல்வேறு பிரிவு சைக்கிளிங் போட்டியில் ஒன்றில் வெள்ளியும், மற்றொன்றில் வெண்கலமும் வென்றார். அதே ஆண்டு பீஹாரில் நடந்த போட்டியில், மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றார்.
இதனால், 2012, 2013, 2014 என தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் நடந்த, 'ரோடு ரேசிங் சாம்பியன்' சைக்கிளிங் போட்டி பட்டத்தை தக்க வைத்து கொண்டார். தன் 19வது வயதில், கர்நாடகாவில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் உயரிய விருதான 'ஏகலைவா' விருது பெற்றார். இதன் மூலம் இளம் வயதில் இந்த விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதன்பின், 2014ல் பெங்களூரில் நடந்த 60 கி.மீ., துாரம் கொண்ட, 'வோடோபோன் சைக்கிளிங் மாரத்தான்' போட்டியில், ஸ்ரீதர் சாவனுார் வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்றார்.
தற்போது, ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். - நமது நிருபர் -

