பட்னாவிசுக்கு கீழ் ஏக்நாத் ஷிண்டே பணிபுரிய வேண்டியிருக்கும்: உத்தவ்
பட்னாவிசுக்கு கீழ் ஏக்நாத் ஷிண்டே பணிபுரிய வேண்டியிருக்கும்: உத்தவ்
ADDED : நவ 23, 2024 10:25 PM

மும்பை: ''மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இனிமேல் பட்னாவிஸ் கீழ் தான் பணிபுரிய வேண்டியிருக்கும்,'' என முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்து உள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத்பவார் கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் நிருபர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே கூறியதாவது: ஏக்நாத் ஷிண்டே, இனி பட்னாவிஸின் கீழ் தான் பணிபுரிய வேண்டும். மஹாராஷ்டிரா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் காலி செய்ய வேண்டும். இதனால், எந்த பங்களாவை நீங்கள் பெறப் போகிறீர்கள் என்பதை முதலில் கண்டுபிடிக்கவும்.
கோவிட் காலத்தில் குடும்பத் தலைவராக நான் சொல்வதை கேட்ட மஹாராஷ்டிரா, எனக்கு இப்படி நடந்து கொள்ளும் என நம்ப முடியவில்லை. நான்கு மாதங்களில் அதிக இடங்களில் ஆளும் கூட்டணி எப்படி வெற்றி பெற முடிந்தது? ( லோக்சபா தேர்தலில் ஆளும் கூட்டணி குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றது) இந்த முடிவுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்?
மக்கள் எங்களது பேச்சை தான் கேட்டனர். மோடி , அமித் ஷா பேச்சை கேட்கவில்லை. அவர்களின் பேச்சை கேட்கவில்லை என மக்கள் கூறினர். அவர்களது பேச்சை கேட்காமலேயே ஓட்டுப்போட மக்கள் முடிவு செய்தனரா? காலியான இருக்கைகள் எப்படி ஓட்டாக மாறியது?
உண்மையான சிவசேனா யார்? கடந்த சில ஆண்டுகளாக கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்திற்காக பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நாட்டில் ஒரே கட்சி தான் இருக்கும் என பா.ஜ., தலைவர் நட்டா கூறினார். தற்போது நடப்பதை பார்க்கும் போது, ஒரே கட்சி ஒரே ஆட்சி அந்த திசையை நோக்கி தான் நகர்கிறது போல் தெரிகிறது. நான் மக்களுக்கு சொல்வது, நம்பிக்கையை இழக்க வேண்டாம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.