சல்மான்கானை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே : ரவுடிகள் ‛கதையை' முடித்துவிடுவோம் என உறுதி
சல்மான்கானை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே : ரவுடிகள் ‛கதையை' முடித்துவிடுவோம் என உறுதி
ADDED : ஏப் 16, 2024 08:13 PM

மும்பை: ரவுடிகள் கும்பலை மாநிலத்தில் அனுமதிக்க முடியாது. மீறினால் அவர்களின் கதையை முடித்துவிடுவோம் என பாலிவுட் நடிகர் சல்மான் கானை சந்தித்து பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பை பாந்த்ராவில், சல்மான் கான் வசிக்கும், 'கேலக்சி அபார்ட்மென்ட்ஸ்' வாசலுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக, நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்துள்ளார். லாரன்ஸ் பிஷ்னோய் உத்தரவுப்படி, இந்த துப்பாக்கிச் சூடு நடத்த அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு தாதாவான ரோஹித் கேடாரா என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தான், ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வைத்ததும்,அவர்கள் இருவரும் அன்மோல் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இன்று பாலிவுட் நடிகர் சல்மான்கானை சந்தித்து பேசினார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பின்னர் அவர் கூறியது,
சல்மான்கான் வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. ரவுடிகள் கும்பலை மாநிலத்தில் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். தேவைப்பட்டால் அவர்களின் (நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயை ) கதையை முடித்துவிடுவோம் என சல்மான் கானிடம் முதல்வர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

