ADDED : செப் 17, 2025 02:23 AM
ஆக்ரா:உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், மின்சார ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீ வீடு முழுதும் பரவியதில் முதிய தம்பதி உடல் கருகி உயிரிழந்தனர்.
உ.பி., மாநிலம், ஆக்ரா மாவட்டம் லட்சுமி நகரில் வசித்தவர் பகவதி பிரசாத்,90. இவரது மனைவி ஊர்மிளா தேவி,85. வீட்டின் முதல் தளத்தில் இந்த தம்பதியின் மகன் பிரமோத் அகர்வால் தன் குடும்பத்துடன் வசிக்கிறார்.
நேற்று அதிகாலை வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ஸ்கூட்டரில் பற்றிய தீ, வீடு முழுதும் பரவியது. வீடு முழுதும் சூழ்ந்த புகையால் இருவரும் தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த ஜெகதீஷ்புரா போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் வந்தனர்.
பகவதி பிரசாத் உடல் கருகி இறந்து கிடந்தார். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஊர்மிளா தேவி, எஸ்.என்., மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்சார ஸ்கூட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.