ADDED : ஜன 23, 2025 05:06 AM
ஹாசன்: முதியவரை தாக்கிக் கொன்ற காட்டு யானை, அவரது உடலை காபி செடிகளுக்குள் மூடிவிட்டுச் சென்றது.
ஹாசன், ஆலுாரின், அடிபைலு கிராமத்தைச் சேர்ந்தவர் புட்டையா, 78. இவர் பணி நிமித்தமாக வேறு கிராமத்துக்குச் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் மாலை, தன் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
காபி தோட்டம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த காட்டு யானை, முதியவரை தாக்கி மிதித்துக் கொன்றது. உடல் மீது காபி செடிகளை போட்டு மூடிவிட்டு அங்கிருந்து சென்றது.
இரவாகியும் புட்டையா வீடு திரும்பாததால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். நேற்று காலை காபி தோட்டத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் பார்வையிட்டனர்.
கிராமத்தில் நீண்ட நாட்களாக, காட்டு யானைகள் அட்டகாசம் உள்ளது. காபி செடிகளை மிதித்து பாழாக்குகின்றன. இப்போது முதியவரை கொன்று விட்டது. எனவே, யானைகள் தொல்லையை கட்டுப்படுத்தும்படி, வனத்துறையினரை கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

