ADDED : செப் 22, 2024 03:44 AM
புதுடில்லி:மத்திய டில்லி திலக் மார்க்கில் ஆட்டோ மீது பி.எம்.டபிள்யூ., சொகுசு கார் மோதி, 63 வயது முதியவர் உயிரிழந்தார். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திலக் மார்க்கில் வசிக்கும் நீரஜ் குமார், அவரது தந்தை சச்சிதானந்தா, 63, மனைவி குமாரி சல்மா, மகன்கள் யாஷ்ராஜ் மற்றும் ஹன்ஸ்ராஜ் ஆகியோர் கடந்த 12ம் தேதி, புதுடில்லி ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றனர்.
சிகந்திரா - மதுரா சாலை சந்திப்பு சிக்னலில் ஆட்டோ மீது பின்னால் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., கார் மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.
ஆட்டோவில் இருந்த ஐந்து பேரும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு எல்.என்.ஜெ.பி., அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சச்சிதானந்தா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பேரன், யாஷ்ராஜ், 8,க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திலக் மார்க் போலீசார், ஹிமாச்சல பிரதேச பதிவு எண் கொண்ட பி.எம்.டபிள்யூ., கார் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.