ADDED : டிச 07, 2024 11:10 PM
பெங்களூரு: பல ஆண்டுகளாக போதைப்பொருள் விற்று வந்த மூதாட்டி, போலீசாரிடம் சிக்கினார். 40 கிலோ கஞ்சா, 33 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரின், பேட்ராயனபுராவில், கணவர், பிள்ளைகளுடன் வசிப்பவர் மெஹருனிசா, 63. இவர் பல ஆண்டுகளாக போதைப்பொருள் விற்று, பெருமளவில் பணம் சம்பாதித்து சொத்துகள் குவித்தார். சமீபத்தில் 35 லட்சம் ரூபாய் விலையில் சொகுசு கார் வாங்கினார். பேட்ராயனபுராவில் நிலம் வாங்கினார்.
மெஹருனிசா போதைப்பொருள் விற்பதாக தகவல் கிடைத்த போலீசார் விசாரணையில் இறங்கினர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அவர், பெங்களூரை விட்டு தப்பினார். குஜராத் சென்று, அங்கிருந்து உத்தரபிரதேசம், மஹாராஷ்டிராவின் நாக்பூருக்கு சென்று தலைமறைவாக இருந்தார்.
இம்மாதம் 5ம் தேதி, நாக்பூரில் மெஹருனிசாவை பேட்ராயனபுரா போலீசார் கைது செய்தனர். அவரை பெங்களூருக்கு அழைத்து வந்தனர். அவரது வீட்டை சோதனையிட போலீசார், நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
நேற்று அவரது வீட்டில் சோதனையிட்டபோது, 40 கிலோ கஞ்சா, 33 லட்சம் ரூபாய் ரொக்கம், அரிவாள் உட்பட எட்டு ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவருக்கு மேலும் பல இடங்களில் வீடுகள் உள்ளன. ஒன்றன் பின் ஒன்றாக போலீசார் சோதனை நடத்துகின்றனர். மெஹருனிசா பல ஆண்டுகளாக போதைப்பொருள் விற்றும், போலீசார் கண்டுபிடிக்கவில்லை.
இவரது வீட்டில் சோதனையும் நடந்தது இல்லை. எனவே இவருக்கு சில போலீசார் ஒத்துழைப்பு அளித்திருக்கலாம் என, உயர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அவர் போதைப்பொருளை எங்கிருந்து கொண்டு வந்தார் என்பது இன்னும் தெரியவில்லை. இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.