ADDED : மார் 18, 2025 05:06 AM
சிக்கமகளூரு: கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் பரவுகிறது. சிக்கமகளூரில் மூதாட்டி ஒருவர் இக்காய்ச்சலுக்கு பலியானார்.
ஷிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் உட்பட, பல மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு தென்படுகிறது. குறிப்பாக சிக்கமகளூரில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இது சுகாதார அதிகாரிகளுக்கும் தலைவலியாக உள்ளது.
சிக்கமகளூரு மாவட்டத்தில், இதுவரை 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. காபி எஸ்டேட்டில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் பலர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்.ஆர்.புராவின், கட்டினமனே கிராமத்தில் வசித்தவர் கமலா, 65. இவர் மெல்வார் கிராமத்தின் காபி தோட்டத்தில் பணியாற்றினார். கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட அவரை, குடும்பத்தினர் கொப்பா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். என்.ஆர்.புரா தாலுகாவில், குரங்கு காய்ச்சல் அதிகரிப்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களை சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கொப்பா அரசு மருத்துவமனையில் தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது.
'வனப்பகுதிக்குள் கிராமத்தினர் செல்ல வேண்டாம். அங்கு குரங்குகள் இறந்திருந்தால், உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய விடுவதை தவிர்க்கவும்.
வனத்துக்கு சென்று வந்தால், உடைகளை வென்னீரில் நனைத்து விட்டு குளிக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொண்டு, சிகிச்சை பெற வேண்டும்' என, சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.