ADDED : பிப் 27, 2024 12:03 AM

புதுடில்லி: தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வங்கிகள் மற்றும் தபால் துறை வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டு சதவீதத்தை உயர்த்தும் வகையில், பல பிரசார இயக்கங்களையும் தேர்தல் கமிஷன் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளும் வகையில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் தபால் துறையுடன், தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு பணிகளில், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் ஈடுபடும். இவற்றின் இணையதளத்தில், ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளிட்டவை இடம்பெறும். மேலும், வங்கிகளின் கிளைகள், தபால் அலுவலகங்களில் விளம்பர வாசகங்கள் அடங்கிய பேனர்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை வைக்கப்படும்.
வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 91 கோடி வாக்காளர்களில், 67.4 சதவீத ஓட்டுகளே பதிவாயின. அந்தத் தேர்தலில், 30 கோடிக்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்கவில்லை. இதையடுத்து, ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டியுள்ளது.
நாடு முழுதும் வங்கிகளுக்கு, 1.63 லட்சம் கிளைகளும், 2.19 லட்சம் ஏ.டி.எம்., மையங்களும் உள்ளன. நாடு முழுதும், 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் உள்ளன.
