ADDED : ஜன 28, 2025 08:03 PM
புதுடில்லி:தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை, 770 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டில்லி சட்டசபை தேர்தல் கடந்த 7ம் தேதி மதியம் 2:00 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. டில்லியில் நேற்று முன் தினம் வரை, நடத்தை விதிமுறையை மீறியதாக 774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலால் சட்டத்தின் கீழ் 24,081 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஆயுதங்கள், மதுபானம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை 374 சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் 453 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 68,636 லிட்டர் மதுபானம், 72 கோடி ரூபாய் மதிப்புள்ள 158 கிலோ போதைப்பொருள், 1,200-க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட ஊசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல, 7.60 கோடி ரூபாய் பணம், 37.39 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டில்லி சட்டசபைக்கு பிப்.,5ம் தேதி தேர்தலும், 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.