மோசடியை அனுமதிக்கும் தேர்தல் கமிஷன்; 100% ஆதாரம் இருக்கிறது என்கிறார் ராகுல்
மோசடியை அனுமதிக்கும் தேர்தல் கமிஷன்; 100% ஆதாரம் இருக்கிறது என்கிறார் ராகுல்
ADDED : ஜூலை 24, 2025 03:06 PM

புதுடில்லி: கர்நாடகாவில் ஒரு இடத்தில் தேர்தல் கமிஷன் மோசடியை அனுமதித்ததற்கான உறுதியான, 100 சதவீத ஆதாரம் எங்களிடம் உள்ளது என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்து உள்ளார்.
பீஹாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.இதுவரை 52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இதில் 18 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், 26 லட்சம் பேர் வேறு தொகுதிகளுக்குச் சென்றுவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் இன்று, பீஹாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை, ஆதரிப்பது தொடர்பாக தேர்தல் கமிஷனை காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
தேர்தல் கமிஷன் தனது வேலையைச் செய்யத் தவறிவிட்டது. இன்று அவர்கள் ஏதோ ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள், இது முழு முட்டாள்தனம். தேர்தல் கமிஷன், இந்திய தேர்தல் கமிஷன் போல் செயல்படவில்லை.
கர்நாடகாவில் ஒரு இடத்தில் தேர்தல் கமிஷன் மோசடியை அனுமதித்ததற்கான உறுதியான, 100 சதவீத ஆதாரம் எங்களிடம் உள்ளது. தனது கட்சி ஒரு தொகுதியை மட்டுமே ஆய்வு செய்து ஏற்கனவே பெரிய முறைகேடுகளைக் கண்டுபிடித்தது.
ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் நாடகம் இதுதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்கள், அவர்களின் வயது என்ன? 50, 45, 60, 65. வாக்காளர் பட்டியலில் மோசடி செய்ய தேர்தல் கமிஷன் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

