'ஓட்டு திருட்டு' என்பது அருவருக்கத்தக்கது ராகுலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்
'ஓட்டு திருட்டு' என்பது அருவருக்கத்தக்கது ராகுலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்
ADDED : ஆக 15, 2025 12:47 AM

புதுடில்லி: 'தேர்தலில் ஓட்டுகள் திருடப்பட்டதாக காங்., - எம்.பி., ராகுல் கூறுவது அருவருக்கத்தக்கது. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது, தேர்தல் கமிஷன் ஊழியர்களின் சுயமரியாதையை புண்படுத்துகிறது' என, தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டுகள் திருடப்பட்டதாகவும், இதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருந்ததாகவும், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'ஓட்டு திருட்டு' என்ற பெயரில் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதை மறுத்த தேர்தல் கமிஷன், 'குற்றச்சாட்டுகள் மீது நம்பிக்கை இருந்தால் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்; விசாரிக்கிறோம். இல்லை எனில் மன்னிப்புக் கேளுங்கள் என, ராகுலுக்கு பதிலடி கொடுத்தது. எனினும் அவர் கையெழுத்திட மறுக்கிறார்.
இந்நிலையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
'ஒரு நபர்; ஒரு ஓட்டு' என்ற கருத்து, நாட்டின் முதல் பொதுத் தேர்தலிலிருந்து தேர்தல் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.
யாராவது எந்தத் தேர்தலிலாவது இரு முறை ஓட்டளித்ததற்கான ஆதாரம் இருந்தால், அதை எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தில் தேர்தல் கமிஷனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, எந்த ஆதாரமும் இல்லாமல் நாட்டின் அனைத்து வாக்காளர்களையும் திருடர்கள் என, வர்ணிக்கக்கூடாது.
ஓட்டு திருட்டு போன்ற அருவருக்கத்தக்க வார்த்தைகளை உபயோகிப்பது, தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்யும் லட்சக்கணக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சுயமரியாதையை புண்படுத்துகிறது.
தவறான தகவல்களை பரப்புவது தேர்தல் செயல்முறையின் நேர்மையின் மீதான நேரடித் தாக்குதல்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.