ஓட்டு திருட்டு புகார் கூறிய ராகுலுக்கு தேர்தல் கமிஷன் 7 நாள் கெடு!: நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தல்
ஓட்டு திருட்டு புகார் கூறிய ராகுலுக்கு தேர்தல் கமிஷன் 7 நாள் கெடு!: நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தல்
UPDATED : ஆக 18, 2025 10:20 AM
ADDED : ஆக 17, 2025 11:44 PM

“ஓட்டு திருட்டு புகார் தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும். இல்லை எனில், அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என அர்த்தம். இதன்பின், அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்காக நாட்டு மக்களிடையே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டுகள் திருடப்பட்டு முறைகேடு நடந்ததாகவும், இதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருந்ததாகவும், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இதை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் கமிஷன், 'உங்களது குற்றச்சாட்டுகளை உண்மை என நம்பினால், பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்; விசாரிக்கிறோம். இல்லை என்றால், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்' என, ராகுலுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், அவர் எந்த பிரமாணப் பத்திரத்தையும் அனுப்பவில்லை.
இதற்கிடையே, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாகவும் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பி இருந்தன.
இந்நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறியதாவது:
பொய் குற்றச்சாட்டுகளை கூறி வாக்காளர்களை தவறாக வழிநடத்தவும், தேர்தல் கமிஷன் மீது அவதுாறு பரப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்ன நடந்தாலும், நாங்கள் வாக்காளர்களுடன் உறுதியாக நிற்கிறோம். எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் இல்லை. அனைத்து கட்சிகளையும் நாங்கள் சமமாகவே பார்க்கிறோம்; நடத்துகிறோம்.
ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இதுபற்றி புகார் தெரிவித்த காங்., - எம்.பி., ராகுல், பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு ஏழு நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். இல்லை எனில், அவரது குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என அர்த்தம். இந்த பொய் குற்றச்சாட்டுகளுக்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாகவும் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதில் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். ஓட்டு திருட்டு போன்ற அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது, அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம்.
அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கையின்படி தான், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. இதில் அரசியல் கட்சிகளின் முகவர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில் எப்படி முறைகேடு செய்ய முடியும்?
பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் தொடர்ந்து, கடந்த 1ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெயர் விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளர்கள், முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படும்.
சட்டசபை அல்லது லோக்சபா தேர்தல் எதுவாக இருந்தாலும், நம் குடிமக்கள் தான் ஓட்டளிக்க முடியும். வெளிநாட்டவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் உடனடியாக நீக்கப்படும். சில நாட்களுக்கு முன், பல வாக்காளர்களின் புகைப்படங்கள் அனுமதியின்றி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. ஓட்டளிக்கும் பெண்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை நாங்கள் பகிர வேண்டுமா?
லோக்சபா தேர்தலில், 1 கோடிக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்தனர். இவ்வளவு பேர் முன்னிலையில், யாராவது ஓட்டுகளை திருட முடியுமா? இரட்டை ஓட்டளிப்பு பற்றி சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால் ஆதாரம் கேட்டால் தர மறுக்கின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கண்டு தேர்தல் கமிஷன் அஞ்சாது.
சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து, நாங்கள் கலந்து பேசி சரியான நேரத்தில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிரிப்பு தான் வருகிறது!
ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையே எந்த பாகுபாடும் காட்டவில்லை என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறுவதை கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது. ராகுல் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதன் மூலம் தேர்தல் கமிஷனின் திறமையின்மை, பாரபட்சம் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்.,
- நமது சிறப்பு நிருபர் -