'கீ' கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் கமிஷன்: பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பேச்சு
'கீ' கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் கமிஷன்: பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பேச்சு
UPDATED : ஆக 28, 2025 10:38 AM
ADDED : ஆக 28, 2025 01:11 AM

சென்னை: ''பீஹார் சட்டசபை தேர்தலில், ராகுல், தேஜஸ்வி வெற்றி பெற்ற பின் நடக்கும் வெற்றி விழா கூட்டத்தில், நிச்சயமாக நானும் பங்கேற்பேன்'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பீஹார் மாநிலத்தில், லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் தலைமையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை கண்டித்து நடந்த நடைபயணத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:
கருணாநிதியும்,- லாலு பிரசாத்தும் மிக நெருக்கமான நண்பர்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தாலும், லாலு பா.ஜ.,விற்கு பயப்படாமல் அரசியல் செய்தவர்.
அந்த காரணத்தால், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளையாக தேஜஸ்வி உழைத்து கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கான போர்க்குரலை, பீஹார் எழுப்பி உள்ளது.
இதுதான் வரலாறு. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார்.
அதற்காக மக்கள் சக்தியை திரட்டினார். அதைத்தான் ராகுலும், தேஜஸ்வியும் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் செல்லும் இடம் எல்லாம், மக்கள் - கடல் போல திரண்டு வருகின்றனர்.
தேஜஸ்வி கார் ஓட்ட, அதில் ராகுல் பயணம் செய்த காட்சியை பார்த்தேன். உங்களின் நட்பு, அரசியல் நட்பு கிடையாது. இரண்டு உடன்பிறப்புகளின் நட்பு. ஜனநாயகத்தை காக்க,- மக்கள் நலனுக்காக ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். பீஹார் தேர்தலில், உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தர இருப்பதே இந்த நட்பு தான்.
பா.ஜ.,வின் துரோக அரசியல் தோற்க போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால்தான், இந்த வெற்றியை தடுக்க பார்க்கின்றனர்.
நியாயமாக,- முறைப்படி ஓட்டுப்பதிவு நடந்தால், பா.ஜ., கூட்டணி தோற்றுவிடும். எனவே, மக்களை ஓட்டளிக்க விடாமல் தடுக்கின்றனர். தேர்தல் கமிஷனை 'கீ' கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றி விட்டனர். மொத்தமாக, 65 லட்சம் பேரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, ஜனநாயகப் படுகொலை.
சொந்த மண்ணில், பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் இருக்க முடியுமா? அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும், அவர்களை முகவரி இல்லாதவர்கள் போன்று ஆக்குவது அழித்தொழிப்பு தானே. ராகுலும், தேஜஸ்வியும் பெற இருக்கும் வெற்றியை தடுக்க முடியாத பா.ஜ., கொல்லைப்புறம் வழியாக இந்த வேலையை பார்க்கிறது.
இதற்கு எதிராக, அவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்த வந்தேன். தேர்தல் கமிஷனின் ஓட்டு திருட்டு மோசடிகளை, ராகுல் அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறார். அவர் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் சொல்கிறார்.
இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் பயப்பட மாட்டார். அவர் வார்த்தைகளிலும்,- கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது. அவர் அரசியலுக்காக,- மேடைகளுக்காக பேசுபவர் கிடையாது. ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்துடன் பேசுபவர். மக்களின் ஓட்டுரிமையை பறிக்கும், பா.ஜ.,வின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பர்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், 'இண்டி' கூட்டணிக்கான அடித்தளத்தை, பாட்னாவில் தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என நினைத்த பா.ஜ.,வின் கர்வத்தை தகர்த்த இடம்தான் பீஹார்.
மக்கள் சக்திக்கு முன், எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் பீஹார் நிரூபிக்க வேண்டும்.
பீஹாரில் பெறப்போகும் வெற்றி தான், 'இண்டி' கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது. பீஹார் சட்டசபை தேர்தலில், நீங்கள் வெற்றி பெற்ற பின் நடக்கும் வெற்றிவிழா கூட்டத்திலும், நிச்சயமாக நான் பங்கேற்பேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தேர்தல் கமிஷனுக்கு எதிரான யாத்திரையில் பங்கேற்க, பீஹார் சென்ற முதல்வர் ஸ்டாலினை கட்டித்தழுவி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வரவேற்றார்.