அரசியலமைப்பு சட்டப்படியே இயங்குகிறது தேர்தல் கமிஷன்; ஞானேஷ் குமார்
அரசியலமைப்பு சட்டப்படியே இயங்குகிறது தேர்தல் கமிஷன்; ஞானேஷ் குமார்
ADDED : ஜூலை 03, 2026 09:33 PM

புதுடில்லி: தேர்தல் கமிஷனின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் சட்டப்படியே மேற்கொள்ளப்படுகிறது என்று மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறி உள்ளார்.
16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கான 2வது மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. இதில் 260க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாக்காளர்கள் பட்டியல் தயாரித்தல், ஓட்டுப்பதிவு செயல்முறை, ஓட்டு எண்ணிக்கை குறித்து பல செயல்முறை விளக்கங்கள் காண்பிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பேசியதாவது;
தேர்தல் கமிஷனின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சட்டம் மறறும் அவ்வப்போது வெளிப்படையாக எழுத்துப் பூர்வமாக முன் வைக்கப்படும் அறிவுறுத்தல்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவு ஓட்டுகள் பதிவானது. தேர்தல் அமைப்பின் மீது வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இதுவே சான்றாகும்.
இவ்வாறு ஞானேஷ்குமார் பேசினார்.
